Monday, March 21, 2011

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே... எனக்கு 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால், நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட வயதில் முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போல ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறும் நிலையில் இருப்பவன், பொய் கூற வேண்டிய அவசியமில்லை.
""மூவேந்தர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளையர் என நம்மை பலர் ஆண்டிருந்தும், இன்றைய காமராஜ் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம், எப்போதும் ஏற்பட்டதில்லை. நம்மை ஆட்சி புரிந்தவர்கள் எல்லாம், கல்விக்கு என்று எதுவும் செய்யவில்லை.
""தோழர்களே... என் சொல்லை நம்புங்கள்... இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால், இன்னும் 10 ஆண்டுகளாவது, காமராஜை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்; அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராஜை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது!'(9.7.1961ல், தேவகோட்டையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், தற்போது ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள கழகங்களுக்கு, "பிதாமகனாக' இருக்கும் ஈ.வெ.ரா., பேசியது.)

Sunday, March 20, 2011

கட்சித் தலைவர்களை பற்றி கண்ணதாசன் கருத்து

கவிஞர் கண்ணதாசன் திரைப்படம், அரசியல் என அனைத்திலும் பிரபலமானவர். அவர் எழுதிய, "நான் பார்த்த அரசியல்' என்ற தலைப்பில், தமிழகத்தின் பிரபலமான அரசியல் தலைவர்கள் பற்றி விமர்சித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:ஈ.வெ.ராமசாமி: பெரியாரிடம் சலியாத உழைப்பிருந்தது. கொச்சையான பாஷை இருந்தது. பலர் சொல்லத் தயங்கிய விஷயங்களை அவர் சொன்னார். ஆனால், அவரைப் பொறுத்தவரை ஒரு சுயேச்சையான அபிப்பிராயக்காரராக மட்டும் இல்லாமல், மற்ற யாரையும் நம்புவதில்லை. "யாரும் யோக்கியர் இல்லை' என்று கூறியபடி சம்பாதிக்கின்ற ஒருவராகவே காட்சியளித்தார். கடைசி வரை அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
அண்ணாதுரை: அண்ணா மிகவும் உத்தமமானவர். தங்கமானவர். பழகுவதற்கு அவரை விட இனிமையானவர் கிடையாது. என் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் முதல் கண்ணீர் அவரின் கண்களில் இருந்து தான் வரும். அன்புக்கு உறைவிடம், அற்புதமான பேச்சாளர். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், மற்றவர்களை கட்டிமேய்க்கவும் இயலாதவராகவே அவர் விளங்கினார். அதனால் தான், "கட்டுப்பாடு' என்ற கோஷத்தோடு தி.மு.க., விளங்கிற்று. ஆகவே தான், அவரை மீறிக்கொண்டு கருணாநிதி உருவாக முடிந்தது.காமராஜர்: நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஒரே ஒரு சுபாவம் அவரிடம் காணப்பட்டது. இன்னொருவன் மேலேறி வரும்பொழுது, அவனை தலையில் தட்டி வைத்துக்கொண்டே இருப்பது தான் ராஜதந்திரம் என்பது. ஆனால், அதை என்னிடம் காட்டியதில்லை. மற்ற தலைவர்களோடு ஒப்பிடுகையில் அவர் உன்னதமானவர், உயர்ந்தவர்.
கருணாநிதி: கருணாநிதியை ஒரு தலைவராக பார்த்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, "பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு' என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறார். வீட்டை மறந்து நாட்டுக்குப் பாடுபட்டவராக அவர் ஒரு காலத்திலேயும் வாழ்ந்ததில்லை.அரசியலிலும் சரி, சாதாரண காலங்களிலும் சரி, முக்கியமான நேரங்களிலும் சரி, தனக்கு, தனக்கு என்பதிலேயேதான் முக்கியமாக இருப்பார். அந்த நினைவுகள் தான் அவருக்கு இருக்கும். எழுத்தாளர் என்றால் தான் தான்; கலைஞர் என்றால் தான் தான்; நடிகன் என்றால் தான் தான்; தன் மகன் தான் என்று தன்னைச் சுற்றியே உலகத்தைக் கணித்தாரே தவிர, பிறருக்கும் அந்த திறமை உண்டு என அவர் ஒரு நாளும் மதித்தில்லை.

காமராஜருடன் ஒரு நாள்

காமராஜருடன் ஒரு நாள்:மறைந்த எழுத்தாளர் சாவி, "காமராஜருடன் ஒரு நாள்' கட்டுரையில் எழுதுகிறார்.இரண்டு மாதங்களுக்கு முன், காமராஜரை டில்லியில் சந்தித்தேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராகவே வந்திருந்தார்.மெட்ராஸ் ஹவுசில் ரிசப்ஷன் ஆபீசர் தீனதயாளிடம் பேசியபோது, "இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, படுக்கப்போவதற்கு, மணி 12 ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானாலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை' என்றார்.
அவை என்ன புத்தகங்கள் என்பதை, எப்படியாவது தெரிந்துகொண்டு விடவேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. மறுநாள் காலை, காமராஜர் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். சோபாவில் சப்பணமிட்டு உட்கார்ந்து, பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் - இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "தங்களை, கூடவே இருந்து கவனிக்கப்போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை' என்றேன்."ஓ! தாராளமாக இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க...' என்று கூறிவிட்டு, பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்தார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.
ஜான் கூன்தர் எழுதிய, "இன்சைடு ஆப்ரிக்கா,' ஆல்டவுஸ் ஹக்ஸ்லி எழுதிய, "எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்,' டைம் மேகசின், நியூஸ் வீக், வி.ச.காண்டேகரின், "சிந்தனைச் செல்வம்' ஆகிய புத்தகங்கள் இருந்தன. தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து, அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார்."ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?'"இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும், சலவை சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்' என்றார்."குளிர் காலத்தில் டில்லியிலிருக்கும்போது கம்பளி சட்டை, கோட்டு ஏதாவது போட்டுக் கொள்வதுண்டா?'"அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ளபடி தான். எப்பவாவது தேவையானால், சால்வை போட்டுக்கொள்வேன்!'"தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து காத்திருக்கிறார்களே... அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பர்?'"சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை, எளிய மக்கள் கேட்கிற உதவிகளெல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்துவிடுவேன். படிச்சவங்க வந்து கேட்கிற காரியங்களில் தான் சிக்கலெல்லாம் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து, இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்வாங்க... நான், "ஆகட்டும், பார்க்கலாம்' என்பேன்."யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். "நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது, "அட்மிஷன்' கொடுத்திருந்தால் சொல்' என்பேன். அப்படி இருக்காது, ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், "ஆமாம். நீ சொன்னது உண்மை தான்' என்று ஒப்புக்கொள்வேன். அவன் அதிலேயே திருப்பதி அடைந்து போய்விடுவான்!'- ஆனந்த விகடன் 1963.

Wednesday, March 16, 2011

காமராஜரின் திட்டமும் திடமும்!

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி குறிப்பிட்டுள்ளார் "சோ'.

Tuesday, March 15, 2011

மக்கள் வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா?

காமராஜ் தலைமையிலான அரசு, பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வில், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அவர்களது வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருந்தது.




இதை உணர்ந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முதல்வர் காமராஜிடம் பேசும்போது, "நாட்டு மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருகிறோம். ஆனால், மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சிகள் பக்கம் சென்று கொண்டிருக்கிறது. நமது சாதனைகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதில் நாம் பின்தங்கியுள்ளோம்' என்று சொன்னார்.




"அதற்கு என்ன செய்யலாம்' என, காமராஜ் கேட்டிருக்கிறார்.

"திரைப்படங்கள் மிக வலிமையான சாதனம். அதனால், நமது ஆட்சியின் சாதனைகளைத் தொகுத்து, ஒரு செய்திப்படமாக வெளியிட்டால், எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையும்' என்று கவிஞர் கூறினார்.

"நாம் மக்களுக்கு செய்யற காரியத்தை, நாமே விளம்பரப்படுத்தணுமா?' என்று கேட்ட காமராஜ், "சரி... அதுக்கு எவ்வளவு செலவாகும்?' எனக் கேட்டார்.




"சுமாரா மூணு லட்ச ரூபாய்' என்று பதில் வந்தது.

"ஏயப்பா...! மக்கள் தந்த வரிப்பணத்தில் மூணு லட்ச ரூபாய் செலவு செஞ்சு நமக்கு விளம்பரம் தேடணுமா? அந்த மூணு லட்ச ரூபாய் இருந்தால், நான் மூணு பள்ளிக்கூடத்தை திறந்திடுவனே! அந்தப் படம் எல்லாம் வேணாம்' என்று சொல்லி அனுப்பி விட்டார் முதல்வர் காமராஜ்.

Monday, March 14, 2011

காமராஜர் – கக்கன் முதல் சந்திப்பு

25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.
நன்றி : ஆனந்த விகடன்.
”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத்தான் நான் முதன்முதலில் பெரியவரைப் பார்த்தேன்.
திரு.வெங்கடாசலபதி என்பவரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்கமாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, எதிரில் சற்றுத் தள்ளி, பெரியவரும் அவரோடு இரண்டு மூன்று பேரும் வந்துகொண்டு இருந்தார்கள்.

”இவர்தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்பர். காங்கிரஸ் ஊழியர்கள் எல்லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு புகழ்ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆகையால், அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது.
இப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. மேலும் அவரோ, தன் சகாக்களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘அறிமுகத்துக்கு இது ஏற்ற தருணம் அல்ல’ என்று எண்ணி, பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே நடந்து சென்றுவிட்டேன்.
இது நடந்தபோது எனக்கு 27 வயது இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சேவாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாணவர்களுக்காக, ஹரிஜன சேவா சங்கம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியில் நாலணா மெம்பர். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்டது இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தேன். இங்கிலீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால், இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்து சேர்ந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, மேலூரில் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என்னை அனுப்பினார்கள். அங்கே ஹாஸ்டல் வார்டனாக இருந்துகொண்டு, கட்சி வேலைகளிலும் ஈடுபட்டேன். அந்த தாலுக்கா காங்கிரஸ் கமிட்டிக்கு நான்தான் தலைவர்.
படிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரியவரும் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தார். என்னைப்பற்றி அவரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந்தது.
1942 போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைக்குப் போய், ஒன்றரை வருஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியும் மேலூருக்கு வந்து ஹாஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழியராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் நானும் ஓர் ஊழியன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக்குத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அசைக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது.
1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன்முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒருவர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!’ என்றார் பெரியவர்.
‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது!’ என்று கூறிய நான், ‘என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியர்களுக்குத்தான் கிடைக்கும்!’ என்றேன்.
‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்றுமை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்!’ என்று பெரியவர் ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
அந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும் அவர் பொறுமையோடும் – நிதானத்தோடும் நடந்துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.
இதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழியராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற்றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித்துப் போற்றுகிறேன். ஆனால் பெரியவரோ, அன்றும் சரி – இன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
எங்களிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு, சாதாரணமானதாக இருந்தாலும், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்கமும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத்தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரார்த்திக்கிறேன்!”

காமராஜ் மதிய உணவு திட்டம்

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி
காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும்,  "கல்விக்கண் திறந்தவர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.

1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு" நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அமர்ந்திருந்தார்.

தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்றுசுந்தரவடிவேலுவிடம் காமராஜர் விசாரித்தார்.

"தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார்.

மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

"தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.

பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.

அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.

இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடிகூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.

தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்."

இவ்வாறு காமராஜர் கூறினார்.

அமைச்சரவை ஆலோசனை

மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.

முடிவில் சத்துணவுத் திட்டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:-

"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.

எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவுத் திட்டத்திற்கு பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன்."

இவ்வாறு காமராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

 
1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.

பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்தப் பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.

மதிய உணவுத் திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962-ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.

இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.

இலவச கல்வி

எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார்.

ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.

1962-ம் ஆண்டில், "வருமான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவசக் கல்வி" என்று காமராஜர் அறிவித்தார்.

1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.