Thursday, July 14, 2011

கல்வி "கதாநாயகன்' : இன்று காமராஜரின் 109 வது பிறந்தநாள்

தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.

கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.

காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்

No comments:

Post a Comment