Monday, March 14, 2011

காமராஜர் செய்த தவறு என்ன தெரியுமா?

சத்தியமூர்த்தி என்பவர் காமராஜருக்கு அரசியல் குருவாக இருந்தவராம்.

சத்தியமூர்த்தியின் மனைவியிடம், "எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம்
செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமணக் கோலத்தில்
பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி
திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்'' என்று காமராஜரின் தாயார் கூறினாராம்.

குருநாதரின் மனைவியும் காமராஜரிடம் இந்த செய்தியை சொல்லியிருக்கிறார். காமராஜர்
எந்த பதிலும் சொல்லாமல் சென்றிருக்கிறார்.
அன்று மட்டும் காமராஜர் "சரி" என்று சொல்லி ஒரே ஒரு கல்யாணம் செய்திருந்தால்
இந்த நாடு இப்படி சீர்கெட்டுப் போயிருக்குமா?.

"கிங் மேக்கரா"யிருந்தவருக்கு "பிரின்ஸ்மேக்கரா"ய் இருப்பது கஷ்டமான காரியமா?

ஒரு பிள்ளை விஜயநகர அரசை உருவாக்க... சோழப்பேரரசை மற்றுமொரு பிள்ளை
கவனித்துக்கொள்ள... சேரப்பேரரசில் அண்ணனோ தம்பியோ கோலோச்ச... எவ்வளவு ஆனந்தமாக
தமிழ்நாடு இருந்திருக்கும்!
தென்னிந்தியா முழுவதும் தமிழன்னையின் குரல் எதிரொலித்திருக்காதா? இந்தி அரக்கி
எட்டிப்பார்த்திருப்பாளா இங்கே?
அண்ணன் தம்பிகள் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்திருந்தால்
முல்லைப்பெரியாறும், காவிரியும், கிருஷ்ணாவும் இப்படி தண்ணீர்ச்சுழலில்
சிக்கித் தத்தளிக்குமா?
ஒற்றைக் கையெழுத்தில் தீர்ந்துபோயிருக்காதா தொல்லைகள்?

தவறு செய்துவிட்டார் காமராஜர்.
படிக்காத தற்குறியாக இருந்திருக்கிறார் காமராஜர்.
டெல்லியில் "ஆர் யூ ரெடி?" என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு காமராஜர்," நான்
ரெட்டி இல்லை. நாடார்" என்றிருக்கிறார்.
ஒரு பேரனோ பேத்தியோ இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமா?
பேரனை ரேடியோ மந்திரியாக்கியிருக்கலாம். டெல்லி ஆங்கில வெறியர்களிடமிருந்து
காமராஜர் தாத்தாவை பேரன் கேடயமாக இருந்து காப்பாற்றியிருக்க மாட்டாரா?

அன்னையின் பேச்சைக்கேட்டு ஒரு திருமணமாவது அவர் செய்துகொண்டிருக்கவேண்டும்.

தவறு செய்துவிட்டார் காமராஜர்.

பிள்ளைகள் இருந்து காங்கிரஸ் கட்சியை பரிபாலனம் செய்து வந்திருந்தால் இப்படி
கதம்பக் கட்சியாகப்போயிருக்குமா காங்கிரஸ்?

கண்ணதாசன் என்று ஒரு கவிஞர். காமராஜருக்கு கொடுத்த சர்ட்டிபிகேட்டைப்பாருங்கள்.
எதிலுமே திறமையில்லாதவராக இருந்திருக்கிறார் பாருங்கள்...

சொத்து சுகம் நாடார்
சுகம்தன்னை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தன்னைப்பெற்ற அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடு ஒன்றே நாடி தன்னலம் ஒன்றும்
நாடாத நாடார்.

 இப்படியெல்லாம்கூட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

எல்லாம் தமிழ்நாட்டின் தலையெழுத்து!

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியமாதிரி பத்திரிக்கைகளில் அண்மையில் ஒரு செய்தி.

"காமராஜர் பேத்திக்கு மருத்துவ செலவிற்காக தமிழக அரசு உதவிசெய்திருக்கிறது."

தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களிலேயே மருத்துவ உதவிக்கு அரசாங்க
உதவியைப்பெற்றவர் காமராஜரின் பேத்தியாகத்தான் இருக்கும்.

தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு!

இந்த பத்திரிக்கைகளுக்காகட்டும்! ...கொஞ்சம்கூட சாமர்த்தியம் போதாது.
இந்தச்செய்தியை கட்டம் கட்டியா போடுவது?

போகட்டும்...இந்தப்பத்திரிக்கைகள் எல்லாம் அற்பமானவை. கொசுவிற்குச் சமமானவை அவை
!

கொசுக்களுக்கு என்ன தெரியும்? மாட்டின் பால் மடியில் போய் உட்கார்ந்து
பாலைக்குடிக்கத்தெரியுமா
அவைகளுக்கு?
இரத்தத்தையல்லவா குடிக்கும் அந்த ஏமாளிக்கொசுக்கள்!

No comments:

Post a Comment