காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி
காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும், "கல்விக்கண் திறந்தவர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.
1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு" நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அமர்ந்திருந்தார்.
தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தரவடிவேலுவிடம் காமராஜர் விசாரித்தார்.
"தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார்.
மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.
அவர் கூறியதாவது:-
"தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.
பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.
இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடிகூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.
தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்."
இவ்வாறு காமராஜர் கூறினார்.
அமைச்சரவை ஆலோசனை
மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.
முடிவில் சத்துணவுத் திட்டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:-
"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.
எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவுத் திட்டத்திற்கு பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன்."
இவ்வாறு காமராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.
பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்தப் பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.
மதிய உணவுத் திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.
1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962-ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.
இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.
இலவச கல்வி
எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.
1962-ம் ஆண்டில், "வருமான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவசக் கல்வி" என்று காமராஜர் அறிவித்தார்.
1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.
No comments:
Post a Comment